கொடுங்கல்லூரில் உள்ள பகவதி தேவிக்கு நடத்தப்படும் வருடாந்திர பரணி திருவிழா மிகவும் புகழ் வாய்ந்ததாகும். உண்மையில் இது சிவன் கோவில் என நம்பப்படுகிறது. அதனால் பகவதி தேவிக்கு பூஜை செய்யும் முன் சிவனுக்கே முதலாவது பூஜை செய்யப்படுகிறது. கொடுங்கல்லூர் கோவிலிலுள்ள பகவதி சிலை ஒரே பலா மரத்தில் செதுக்கப்பட்டுள்ளது என நம்பப்படுகிறது. தேவி சிலையின் முகம், முகமுடியால் மறைக்கபட்டும் பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டும் காணப்படும்.
பரணி நட்சத்திரத்தன்று கொடியேற்றுவார்கள். இந்த உற்சவத்தின் முதல் நாளன்று, கோவிலின் வடக்கு நுழைவாயிலின் அருகே புதைக்கப்பட்டிருக்கும் இரண்டு வட்ட வடிவமான கற்களை எடுத்துப் பூஜை செய்து, அவற்றிற்கு சிவப்பு நிறப் பட்டுத் துண்டு சாற்றி, அந்தக் கற்களை மீண்டும் பூமியில் புதைக்கி றார்கள். இதற்கு "கோழிக்கல்லு மூடுதல்' என்று பெயர். ஒரு காலகட்டம் வரை இந்தக் கற்களின் மீது கோழியின் ரத்தத்தை ஊற்றி காளிக்குச் சமர்ப்பித்ததாகவும், தற்சமயம் அது நிறுத்தப் பட்டு சிவப்பு நிறப் பட்டுத் துண்டு சாற்றப் படுவதாகவும் கூறுகிறார்கள்.
இந்த சமயத்தில் நடக்கும் இன்னொரு சடங்கு காவு தீண்டல். இந்தச் சடங்கில் கலந்து கொள்ள கேரளத்தின் பல பாகங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.. ஒவ்வொரு குழுவையும் தலைமை தாங்கி ஒரு வெளிச்சப்பாடு (ஆணோ, பெண்ணோ) அழைத்து வருகிறார். அனைவரும் செந்நிற ஆடையே அணிந்திருப்பர். இந்த வெளிச்சப் பாடின் கையில் ஒரு நாந்தகம் வாள் (வாளின் நுனி பிறைச் சந்திரன்போல காணப்படும்) இருக்கும். அந்த வாளின் பல இடங்களிலும் சிறிய சிறிய சலங்கைகள் கொத்து கொத்தாகக் கட்டித் தோரணமாக்குகிறார்கள். அந்த வெளிச் சப்பாடு அடிக்கடி வாளை தலைக்கு மேலே உயர்த்திப் பிடித்து வாளை ஆட்டும்போது சதங்கைகளின் நாதம் கேட்கும். அந்த வெளிச் சப்பாடின் இடுப்பிலும் ஒலிஎழுப்பும் சிறிய மணிகள் கட்டப்பட்டிருக்கும். அனைவரும் கால்களில் சிலம்பு அணிந்திருப்பர்.
இந்த உற்சவத்தில் பங்கு கொள்ளும் பக்தர் கள்- தெறிப்பாடல் எனப்படும் பாடல்களைப் பாடிக்கொண்டு கோவிலின் வெளிப்புறத்தைச் சுற்றி ஆவேசம் வந்ததுபோல மூன்று முறை ஓடுகிறார்கள். ஒருசிலரின் கைகளில் இரண்டு சிறிய கழிகள் காணப்படுகின்றன. அந்தக் கழிகளினால் கோவிலின் மேற்கூûரையின் ஓரத்தில் தட்டிக் கொண்டே பாடல்களைப் பாடிக்கொண்டு வேகமாக ஓடுகிறார்கள். ஓடிக்கொண்டே மஞ்சள் பொடி, தேங்காய், மிளகு ஆகியவற்றை கோவிலினுள் வீசி எறிகி றார்கள். அந்த நேரத்தில் கருவறை மற்றும் எல்லா சந்நிதிகளின் கதவுகளும் மூடப் பட்டிருக்கும்.
இந்த காவு தீண்டல் சடங்கு முடிந்த பிறகு கோவில் ஒரு வாரத்திற்கு மூடப்படும். பிறகு "சுத்திகரணம்' செய்த பிறகே ஆலயத்தைத் திறப் பார்கள். கோவிலில் நடக்கும் இன்னொரு முக்கியச் சடங்கு, சந்தனப் பொடி சாற்றுதல். மூல விக்ரகம் பலா மரத்தினால் செய்யப் பட்டுள்ளதால் அதற்கு உறுதி கொடுக்கும் வண்ணம் இந்தச் சடங்கு பரணி உற்சவம் தொடங்கும்முன் நடைபெறுகிறது.
பக்தர்கள் கொடுங்கல்லூர் பகவதியை, "கொடுங்கல்லூர் அம்மா' என்று வாஞ்சையுடன் அழைக்கிறார்கள்.
அம்மா தன்னுடைய குழந்தைகளின் குற்றங்குறைகளை மன்னித்து அவர்களுக்கு நன்மையை மட்டும் செய்பவள்தானே! அதுபோல கொடுங்கல்லூர் பகவதியும் பக்தர் களின் குற்றங்களை மன்னித்து, அவர்களது மனக்குறைகளைத் தீர்த்து அருள்புரிந்து வருகிறாள்.
No comments:
Post a Comment